திருவண்ணாமலை சிவன் கோயிலானது மிகவும் பழமை வாய்ந்த மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். தமிழகமெங்கும் இது போன்ற பல்வேறு வரலாற்று சின்னங்களாக பெரும்பாலும் கோயில்களே இருந்து வருகிறது. ஆனால் இப்படியான வரலாற்று சிறப்புகளை அழியும்வரை வேடிக்கை பார்த்தே வருகிறோம்.

இது போல் அழிந்து வரும் வரலாற்று ஆவணங்களை, தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்தும் வகையில், மரபு சார் அமைப்பின் தொல்லியல் பிரிவு மூலம், ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வுகளின் போது கல்வெட்டுகளும், செப்புப்பட்டயங்களும் மேலும் பல ஆதார சான்றுகளும் கிடைத்த வண்ணம் இருக்கும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு, 1,000 ஆண்டுகள் பழமையான ராஜேந்திர_சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

அதை தற்போது ஆவணப்படுத்தி வைத்துள்ள நிலையில், மேலும் தொடர்ந்து ஆய்வு பணி நடந்து வந்தது. இதில் தற்போது, அருணாச்சலேஸ்வரர் கோவில், மூன்றாம் பிரகாரத்தில், திருக்கல்யாண மண்டபம் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மற்றொரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஜயலாய மன்னனின் மகனான முதலாம் ஆதித்யன் காலத்தை சேர்ந்த கல்வெட்டாகும். அதாவது, இந்த கல்வெட்டு, கி.பி., 890-ம் ஆண்டை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

இதற்கு முன் கண்டுடெடுக்கப்பட்ட கல்வெட்டு, கி.பி., 885-ம் ஆண்டு கல்வெட்டாகும். அவை முற்றிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அதில் உள்ள விவரங்களை அறியமுடியவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, இந்த கல்வெட்டில், 20 பொற்காசுகள் தானமாக கொடுக்கப்பட்ட தகவலும், தற்போது அழைக்கப்படும் திருவண்ணாமலை என்பதை, திருவெண்ணாநாடு என அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த பொற்காசு எதற்காக கொடுக்கப்பட்டது என்ற விவரம் இந்த கல்வெட்டின் மூலம் அறியமுடியவில்லை. மேலும் தகவல்களை, மரபு சாரா தொல்லியல் அமைப்பு மூலம் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.