நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சீசன் போதுமானதாக இல்லை. அருவிகளிலும் இடைஇடையே தண்ணீர் அதிகமாக விழுவதும், பின்னர் குறைவாக விழுவதுமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

வழக்கமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியுடன் குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட மாறுதலாக உள்ளது. அதாவது சீசன் காலங்களில் எல்லாம் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. சீசன் முடியும் தருவாயில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த 10 நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது.